சனி, 14 ஜூலை, 2012

அன்புக் கோவில் அரசன் !

 உள்ளத்தில் கட்டிய அன்புக்கோவிலில்
 முதல் காதலி குலதெய்வமாக,
  கட்டிய மனைவி கற்பக்கிரகமாக,
  நட்புடன் வந்த நங்கைகள்
  பிரகார பதுமைகளாக,
  உறவுகள் உள்ளிருக்கும் வவ்வால்களாக,
  பற்றுடன் கட்டிய கோவிலின் வெளி
  பிரகாரத் திண்ணையில்,
  வளைந்து குறுகி, வாடைக்காற்றில்
  அந்த அன்புக் கோவில் அரசன்   !

                                  -கிரிஷ் சுப்ரமணியன்

வெள்ளி, 6 ஜூலை, 2012

அப்பா என்றொரு மகான் !!!


சிட்டுக்குருவிகளின்  கீச்கீச் ஒலி .. . . . . . .
கரிச்சான்    குருவிகளின்  ஏகாந்த ஒலி . . . . . .
மாந்தோப்புக் குயிலின் இழையோடும் சோகக் கூவல். . .
இளவம் பஞ்சை பறக்க விட்டது போல. . . .
இளங்காலை மேகக்கூட்டம்.

இயற்கை இன்னமும் முழுமையடையவில்லை,
இரவுக்காவலுக்குச் சென்ற அப்பாவின்
சைக்கிள் மணி ஓசை இன்னமும் கேட்கவில்லை. . .
எங்கோ,தொலைவில் ஓம்கார ஓசையாய் மணி சப்தம்.. .
என்னுள் ஆழிப் பேரலையாய் ஆத்ம தாண்டவம்.

அப்போது எனக்கு வயது ஐந்திருக்கும்,
அழியாத நினைவிருக்கிறது,அது நான் பரிசித்துணர்ந்த
முதல் மகான் அவர்.அப்பாவின் வாசம்
இன்னமும் என் சுவாசப்பைகளில் மோகனமாக. . .
நாழிகைகளும்,நாட்களுமாய்,  கொடுத்த

ஆன்ம வேதனைகள் அவருக்கு  அதிகம். . . . .
உறவுகளும் பிள்ளைகளும் தந்த
உதாசீனப்பட்டங்கள் எண்ணவொல்லா. . . . . .
உள்ள  ஊழித்தீயில் அத்தனையும் சாம்பலாயின.
ஒரு மகானுக்குரிய  அத்தனை ஏகாந்த மனது.

அதில் எப்போதாவது  வரும் ராஜரிசியின் கோபம். . . .
அதை தாங்கிக்கொள்ளும்  கானகமாய் எனது அன்னை.
எப்போதோவரும் நிகழ்வுகளை  முன்கூட்டியே
கட்டியம் சொன்னவர். பாவம்,ஞானிகளுக்கு
சொந்த வீட்டிலும்,உள்ளூரிலும் மதிப்பில்லை.

 சொந்த வீட்டு கனவு ,பிள்ளைகளால்  கலைந்து போனது
 கண்ணீர் சிந்த     இரண்டு பெண் பிள்ளைகள்.
இல்லாத இராஜ்ஜியத்திற்கு கடகத்தில்,மீனத்தில்,
மேஷத்தில் கடைசியாக சுவாதியிலும் ஒருவன்
என்று கணக்காய் வளர்த்திட்டாய்,தங்கள் கணக்கிற்குள்

 நீங்கள் வரவில்லை என்று நிம்மதிக்காக
தொலைத்துவிட்டார்கள் தங்களை.
தமையன் வீடு தங்கள்  மரணத்தால் தீட்டாகும் என்று
நாங்கள் அறியாத  உறவுகளின் இரவல் திண்ணையில்
தங்கள் உடல். பனந்தோப்பை வளர்த்து, இறுதி நாளில்

இளநீருக்காக காத்திருந்தவர்கள் நீங்கள்.
உங்கள் வாழ்க்கை தேருக்கு இரண்டு சல்லியன்கள்.
பணமும்,படாடோபமும் மக்களைச் சூறாவளியாய்
சுழற்றுகின்ற காலம்,இங்கு பட்டிணத்தார்களும்,பறமஹம்சர்களும்
மறக்கடிக்கப்பட்டனர்.ஊரெல்லாம் பேச்சு,நாங்கள் மெத்தபடித்தவர்களென்று.

இளையதலைமுறைக்கு நான்கு வழிப்பாதை. இன்னமும் அவரின்
மொளனத்திற்கான காரணம் புரியவில்லை.
இப்போதும் ,அவர் ஆன்மா விட்டுச் செல்லுமுன் அவர் கண்கள்
சொல்லியது  ஆதவனாய் என்னுள் வழி நடத்துகிறது. உங்களுக்கும்
ஒரு மகான் இருந்திருப்பார்,இருக்கிறார் அடையாளம்

காணமுடியவில்லை உங்களால்.மனசாட்சிகள்
மங்கிப்போகின்றன.திட்டு திட்டாய் ஆன்மீக
அடையாளங்கள் இல்லாதவரை நாம் மகானாக
ஏற்றுக் கொள்வதில்லையே !!!


                        ஆன்மீக தேடலும் ஆத்ம தரிசனமும் தொடரும்......

                                 ( கிரிஷ் சுப்ரமணியன்)